வட்டூநடுவே வளர்கின்ற ர் மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்
1-9. வட்டூநடுவே
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"புறம் புல்குவான்" — கண்ணன் பின்னால் வந்து கட்டிக்கொள்ளும் இன்பத்தை ஆழ்வார் அனுபவிக்கும் பதிகம். கிண்கிணி ஒலிக்க, சிறு அணிகலன்கள் ஆட, குழந்தை மெல்ல நடந்து வந்து பின்னால் அணைக்கிறது. அணைக்கும் அந்தக் கைகள்தாம் உலகை அளந்தவை, தேர் ஓட்டியவை, வெண்ணெய் திருடியவை. முதற்பத்தின் நிறைவாக, குழந்தைப் பருவத்தின் இனிமை இங்கே உச்சம் பெறுகிறது.
பெரியாழ்வார் திருமொழி 1-9 வட்டூநடுவே (தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
கிங்கிணி கட்டிக் கிறி கட்டி கையினில் கங்கணமிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி ர தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்
கத்தக்கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்புறம் புல்குவான்
நாந்தகம் ஏந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண்தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான்
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி கண்பல செய்த கருந்தழைக் காவின் கீழ் பண்பல பாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு மண்பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்
சத்திரமேந்தித் தனியொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என்புறம் புல்குவான்
பொத்தவுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான்
மூத்தவை காண முதுமணற் குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான்
ஆய்ச்சியன்றாழிப் பிரான் புறம் புல்கிய வேய்த்தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே