நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரைப் பெண்ணாகி அழுதூட்டும் பெருமானார் மருவினிய தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே
2-6. நண்ணாத
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
அசுரர் நடுவே புகுந்து, பெண் வடிவம் கொண்டு வானவரைக் காத்த மோகினி அவதாரத்தை நினைவுகூரும் பதிகம். வலிமையால் அல்லாமல் தந்திரத்தால் காத்த ஒரு நிகழ்ச்சியை ஆழ்வார் மகிழ்வுடன் சொல்கிறார். காப்பதற்கு எந்த வடிவம் தேவையோ அதை எடுப்பதில் அவனுக்குத் தயக்கமே இல்லை.
பெரிய திருமொழி 2-6 - நண்ணாத (திருக்கடல்மல்லை 2)
பார்வண்ண மடமங்கை பனி நன்மாமலர்க் கிழத்தி நீர்வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவனூர் கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே 2.
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான் வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலங் கொள்ள கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே
விண்டாரை வென்று ஆவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழலேற வெஞ்சமத்துக் கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே
பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர் விச்சைக்கிறை என்னும் அவ்விறையைப் பணியாதே கச்சிக் கிடந்தவனூர் கடல்மல்லைத் தலசயனம் நச்சித் தொழுவாரை நச்சு என்தன் நல்நெஞ்சே!
புலங்கொள் நிதிக்குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும் நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம் வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே!
பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் கடல்மல்லைத் தலசயனம் நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே!
செழுநீர் மலர்க் கமலம் திரை உந்து வன்பகட்டால் உழுநீர் வயல் உழவர் உழப் பின் முன் பிழைத்து எழுந்த கழுநீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம் தொழுநீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே!
பிணங்களிடு காடு அதனுள் நடமாடு பிஞ்ஞுகனோடு இணங்கு திருச்சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம் விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம் வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே!
கடி கமழும் நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் வடிகொள் நெடுவேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் முடிகொள் நெடுமன்னவர் தம் முதல்வர் முதல் ஆவாரே
அடிவரவு: நண்ணாத பார் ஏனத்தின் விண்டாரை பிச்சம் புலம் பஞ்சி செழுநீர் பிணங்கள் கடி திவளும்